Wednesday, November 19, 2008

வைகை பெருகி ..

19

வைகை பெருகி வர
வார்ந்த மணல் ஊர்ந்து வர

ஊறி வந்த தண்ணியிலே(கண்ணே)நீ
ஒட்டி வந்த கட்டி முத்தோ

பெருகி வந்த தண்ணியிலே நீ
பின்னணைந்த சந்தனமோ

சந்தணமோ என் பொருளோ நீ
சாமி தந்த தவப்பயனோ

கொட்டி வைத்த முத்தோ நீ
குவிந்த நவ ரத்தினமோ

கட்டிக் கரும்போ நீ
காணிக்கை ஆணி முத்தோ

முத்தில் ஒரு முத்தோ நீ
முதிர விளைந்த முத்தோ

தேற விளைந்த முத்தோ நீ
தில்லைக் குகந்த முத்தோ

ஆயிரம் முத்திலே நீ
ஆராய்ந்தெடுத்த முத்தோ

தொண்ணூறு முத்திலே நீ
துணிந்தெடுத்த ஆணி முத்தோ!

ஆணிப்பெரு முத்தோ நீ
அய்யாக்கள் ஆண்ட முத்தோ

பாண்டி பெருமுத்தோ நீ
பாட்டன்மார் ஆண்ட முத்தோ

முத்தானோ முத்தோ நீ
மூவாக்கள் ஆண்ட முத்தோ!

முத்தோ பவழமோ நீ
முன் கைக்கு பொன் காப்போ!

கோர்த்த நல் முத்தோ நீ
குறத்தி கையில் தாழ் வடமோ!

10 comments:

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

மீனா, பல நாள் கழித்து உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி. தாலாட்டுப் பாடல்கள் சிலவற்றைப் படித்தேன். மிகவும் இதமாக இருக்கிறது. நல்ல வேலை செய்கிறீர்கள். நன்று. எல்லோரும் நலந்தானே?

மீனாமுத்து said...

செல்வராஜ்!

முதல் பின்னூட்டம் தங்களிடம் இருந்து!
மிகவும் மகிழ்ச்சி நன்றி.

தங்களின் அன்பு புதல்விகள் நலமா?

\\ நல்ல வேலை செய்கிறீர்கள்\\

ஆமாம் முன்பு தோழியரில் இந்த தாலாட்டு பாடல்களை போட்டு கொண்டிருந்தேன்!மீண்டும்
நீண்ட நாட்களுக்கப்புறம் இங்கே அதை தொடர்கிறேன் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அருமையான பதிவுகள்.. பாராட்டுக்கள்..

Arunachalam said...

மிகவும் இதமாக இருக்கிறது. அருமையான பதிவுகள்.. பாராட்டுக்கள்..

please continue...

மீனாமுத்து said...

முத்துலெட்சுமிக்கும் அருணாசலத்திற்கும் என் நன்றி. தங்களின் பாராட்டு கண்டு மனம் மகிழ்ந்தது.

கோபிநாத் said...

முத்து அக்காவின் பதிவின் மூலம் உங்கள் பதிவுக்கு வந்தேன்.

உண்மையில் மிக மிக தேவையான பதிவுகள். ஒவ்வொரு வரியும் வாசிக்கும் போது அம்மாவின் நினைவுகள் வந்துவிடுகிறது.

நல்ல உழைப்பு...நிறைய எழுதுங்கள் ;)

மிக்க நன்றி

மீனாமுத்து said...

இங்கு வந்ததோடல்லாமல் பாராட்டியது மகிழ்ச்சி நன்றி கோபிநாத்!

இது என் சங்கப்பலகை said...

ஆகா..தூக்கம் தொலைத்த வாழ்வின் வெளியில்..தாய்மையின் சொத்தாம் தாலாட்டை சேகரிக்கும் பெரும்பணியை, இசை பணியை செய்கிறீர்கள் மெத்த மகிழ்ச்சி. அனைத்தையும் மெடுக்களாக்கி பாடி மகிழ்ந்தேன். இன்று நன்கு உறங்குவேன்.மேலும் நீங்கள் மருத்துவர் என்றும் என் எழுத்துக்கு நீங்களிட்ட கைசான்று..பெருமைக்குரியது என்றும் "அழகி"-மென்பொருள் நிறுவனர் திரு.விசுவனாதன், என்னோடு மகிழ்வை பகிர்ந்தார். உங்கள் எழுத்து பணியையும் கண்டு இரட்டிப்பு மகிழ்வு எனக்கு.தொடரட்டும் கலப்பில்லா தாய்மடியில் சுரந்த இசை மெட்டுக்களின் சேகரிப்பு.

மீனாமுத்து said...

\\ என் எழுத்துக்கு நீங்களிட்ட கைசான்று..பெருமைக்குரியது \\

அடடா!நான் மிக மிக சாதாரணமானவள்.பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி இருக்கீங்க!அப்படியெல்லாம் இல்லை.

நான் மருத்துவரின் மனைவி(பாதி மருத்துவர் என்று சொல்லலாமா?:) விஸ்வனாதன் மிகவும் அன்புள்ளம் கொண்டவர் எல்லோரையும் உயர்வாகவே மதிக்ககூடியவர்.
நீங்கள் தாலாட்டு குறித்து விரிவாக பாராட்டியது மிக மகிழ்ச்சி.

\\ அனைத்தையும் மெட்டுக்களாக்கி பாடி மகிழ்ந்தேன்.\\

உண்மைதான்! தாலாட்டே சுகம், மெட்டுப் போட்டு பாடுவது மேலும் இதமான சுகம்.

ரொம்ப நன்றி திரு வெங்கட்.

மீனாமுத்து said...

விஸ்வனாதன் மிகவும் அன்புள்ளம் கொண்டவர் எல்லோரையும் உயர்வாகவே மதிக்ககூடியவர்.

அவருக்கு என் வணக்கங்கள்.